இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா?
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்த வர்த்தக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் 12ம் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் விரும்புகின்றன. இந்த வர்த்தக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இன்னும் ஒருமித்த கருத்துக்களை அடையவில்லை. எனினும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முக்கியமான சில விஷயங்களில், இரு நாடுகளும் சற்று வளைந்து கொடுத்துச் செல்வதாகவே கூறப்படுகிறது. ஆனால், சில விஷயங்களில் இரு நாடுகளின் கோரிக்கைளும் ஏற்றுக் கொள்ளப்படாமல், தீர்வு எட்டப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை:
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி, பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களின் இறக்குமதி வரியை 100%-தில் இருந்து 75% ஆகக் இந்தியா குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கி மதுபானத்திற்குமான வரியையும் 150%-தில் இருந்து 100% ஆக இந்தியா குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் மக்களுக்கு கூடுதல் அனுமதிகளை இந்தியா எதிர்பார்க்கிறது. மேலும், பிரிட்டனுக்கு வரும் இந்திய மக்களுக்கான விசா விதிமுறைகளில் சில தளர்வுகளை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து, 2030-ம் ஆண்டிற்குகள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை இரண்டு மடங்காக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன.