இந்தியாவின் தனியார் துறை உற்பத்தி அசுர வளர்ச்சி: செப்டம்பரில் உற்பத்தித் துறை PMI 55.7 ஆக உயர்வு
செய்தி முன்னோட்டம்
உற்பத்தி துறையின் வலுவான செயல்பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தனியார் துறையின் வணிக நடவடிக்கைகள் கணித்ததை விட பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக HSBC அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியத் தனியார் துறையின் உற்பத்தியை கணிக்கும் HSBC Flash India Composite Output Index-இன் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 54.3 என்ற அளவிலிருந்து செப்டம்பரில் 56.5 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவான அதிவேக வளர்ச்சிப் போக்காகும். உற்பத்தித் துறையின் PMI குறியீடு ஆகஸ்டில் 52.8 ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 55.7 ஆக அதிகரித்துள்ளது. சேவைத் துறையின் தொழில் நடவடிக்கை குறியீடு ஆகஸ்டின் 54.1 என்ற அளவிலிருந்து 55.8 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது.
சந்தைத் தேவை
புதிய ஆர்டர்கள் மற்றும் சந்தைத் தேவை அதிகரிப்பு
உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு துறைகளிலுமே புதிய ஆர்டர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
உற்பத்தித் துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்வைச் சந்தித்துள்ளது.
அதேவேளையில் சந்தைப்படுத்தல் முயற்சிகள், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, பயண முன்பதிவுகள், மென்பொருள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்ததே சேவைத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எனச் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் புதிய ஆர்டர்களின் தொடர்ச்சியான வருகை காரணமாக, இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கமும் செப்டம்பர் மாதத்தில் வேகமெடுத்துள்ளது.
உற்பத்தி மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே ஒரே சீரான அளவில் புதிய பணியாளர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.