கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு
கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பருப்பு விலை மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஜூன் 2024 இல் உணவுப் பணவீக்கம் 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும், பின்னர் 2025இல் 2ஆம் காலாண்டில் உணவு பொருட்களின் விலை மிகவும் அதிகரிக்கும். மேலும், பருப்பு வகைகளின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் மூத்த ஆய்வாளர் பராஸ் ஜஸ்ராய் கூறியுள்ளார். மே மாதத்தில் 16.8 சதவீதமாக இருந்த பருப்பு வகைகளின் பணவீக்கம் தற்போது 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
27.3 சதவீதத்தை தொட்ட காய்கறி பணவீக்கம்
நாட்டில் முதன்மையாக நுகரப்படும் பருப்பு வகையான துவரம் பருப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஜூன் மாதத்தில் மொத்த சந்தையில் 33.7 சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் இதன் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.13,737.9 ஆக இருந்தது. காய்கறி பணவீக்கம் இந்த மே மாதத்தில் அதிகபட்சமாக 27.3 சதவீதமாக இருந்தது. "வட இந்தியாவில் நிலவும் வெப்பம் அதிகரித்துள்ளதாலும், கடந்த ஒரு வாரமாக பெய்யும் பருவமழையின் வேகம் குறைந்துள்ளதாலும் விவசாய வருமானம், உணவுப் பணவீக்கம் மற்றும் பொது சுகாதார நிலைமைகள் மோசமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கேர்எட்ஜ் தலைமைப் பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா கூறியுள்ளார்.