Loading...
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2026: ஜிஎஸ்டி கைது அதிகாரம் ரத்து, வர்த்தகர்களுக்கு பல்வேறு அதிரடி தளர்வுகள்
பல முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2026: ஜிஎஸ்டி கைது அதிகாரம் ரத்து, வர்த்தகர்களுக்கு பல்வேறு அதிரடி தளர்வுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
06:44 pm

செய்தி முன்னோட்டம்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்டமாக, வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வணிக நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் கைது அதிகாரத்தை ரத்து செய்தல், வழக்குப்பதிவு வரம்பை உயர்த்துதல் மற்றும் ரீஃபண்ட் வசதிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வரிகளுக்கு எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி விதிகளின் கீழ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கைது செய்யும் அதிகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடவடிக்கைக்கான வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி முறைகேடுகளை தரவு பகுப்பாய்வு மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சாதாரண தவறுகளுக்கு கிரிமினல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்படும். பொதுவான அபராதத் தொகையும் ரூ.25,000-லிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரீஃபண்ட்

வேகமான ரீஃபண்ட் மற்றும் புதிய பதிவு முறை

தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையை விரைவாக வழங்கிட, விண்ணப்ப ஒப்புகைக்கான காலவரம்பு 15 நாட்களிலிருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 சதவீத ரீஃபண்ட் தொகை 3 வேலை நாட்களுக்குள் அனுமதிக்கப்படும்.

மேலும், குறைந்த ஆபத்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரிகள் தலையீடின்றி 3 நாட்களுக்குள் தானியங்கி முறையில் ஜிஎஸ்டி பதிவு வழங்கப்படும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சலுகைகள்

சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான சலுகைகள்

ரூ.5 கோடி வரை விற்றுமுதல் கொண்ட சிறு வணிகர்கள் காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்திவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் புதிய விருப்பத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்யும் சிறு வணிகர்கள் பிற மாநிலச் சேமிப்பு கிடங்குகளை தங்கள் முதன்மை வணிக இடமாக எளிதில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களை குறிப்பிட்ட உளவுத் தகவல்கள் அடிப்படையில், இணை ஆணையர் அந்தஸ்திற்கு குறையாத அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே சோதனையிட முடியும்.

ADVERTISEMENT