₹1.25 லட்சம் அருகே தங்கம் விலை: 2027-ல் எவ்வளவு உயரும்; முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
செய்தி முன்னோட்டம்
இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சற்று மீண்டு 10 கிராமுக்கு ₹1.25 லட்சம் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஜனவரி 2026-ல் தொட்ட ₹1.80 லட்சம் என்ற உச்சத்திலிருந்து சுமார் 32% சரிந்து ₹1.22 லட்சம் வரை சென்ற தங்கம் இன்று நவம்பர் 27 அன்று எம்சிஎக்ஸ் சந்தையில் ₹1,24,816 ஆகவும் சில்லறை சந்தையில் 24 காரட் தங்கம் ₹1,25,440 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் மற்றும் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சந்தை நிபுணர்கள் முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
கணிப்பு
2027 இறுதிக்குள் தங்கம் அவுன்ஸுக்கு 4,600 டாலரை எட்டும் என ஜேபி மோர்கன் கணிப்பு
அமெரிக்க வட்டி விகித உயர்வால் குறுகிய காலத்தில் அழுத்தம் நீடித்தாலும் நடுத்தர காலத்தில் தங்கத்தின் போக்கு சாதகமாகவே உள்ளதாக ஜேபி மோர்கன் பிரைவேட் பேங்க் நிபுணர் யுக்சுவான் டாங் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கிகளின் தொடர் தங்கம் கொள்முதல் மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சிக்கு எதிரான பாதுகாப்புத் தேவை ஆகியவை தங்கத்திற்கு வலுவான ஆதரவை அளிக்கும் என்றும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சர்வதேச தங்கம் விலை அவுன்ஸுக்கு 4,600 டாலரை எட்டும் என்றும் அவர் கணித்துள்ளார்.
தற்போதைய 3,648 டாலர் விலையிலிருந்து இது சுமார் 26% உயர்வாகும் எனினும் ரூபாய் மற்றும் டாலர் மாற்று விகிதத்தைப் பொறுத்தே இந்திய தங்கத்தின் லாபம் அமையும்.
முதலீடுகள்
மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் இந்திய தங்க இடிஎஃப் முதலீடுகள் குறித்து மோதிலால் ஆஸ்வால் அறிக்கை
அமெரிக்க பணவீக்க உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு வலுப்பெற்று டாலர் மதிப்பு உயர்ந்ததே சமீபத்திய தங்கம் விலை சரிவுக்கு முக்கியக் காரணம் என மோதிலால் ஓஸ்வால் பிரைவேட் வெல்த் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் செப்டம்பரில் மட்டும் போலந்து மற்றும் சீனா தலைமையில் மத்திய வங்கிகள் 61 டன் தங்கத்தை வாங்கியுள்ளதோடு உலகளாவிய தங்க இடிஎஃப் கையிருப்பு 4,256 டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
இந்தியாவிலும் திருமண மற்றும் பண்டிகை காலத் தேவையால் மூன்றாம் காலாண்டில் நகைத் தேவை 33% உயர்ந்து 100 டன்னாகவும் இந்திய தங்க இடிஎஃப் முதலீடுகள் செப்டம்பரில் 71% உயர்ந்து ₹4,451 கோடியாகவும் அதிகரித்துள்ளன.
சரியான உத்தி
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் இந்திய முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய சரியான உத்தி என்ன?
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொடரும் பணவீக்கத்தால் வரும் டிசம்பரில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என ஜியோட்டஸ் சிஇஓ விக்ரம் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுத் தங்கம் விலையில் காணப்படும் தற்போதைய மீட்சி நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும் இதனை முழுமையான ஏற்றப் போக்காக இப்போதே கருத முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே இந்திய முதலீட்டாளர்கள் தினசரி திடீர் விலை உயர்வுகளைத் துரத்தி முதலீடு செய்வதைத் தவிர்த்து நீண்டகால நோக்கில் படிப்படியாக தங்கத்தை சேமிப்பதும் போர்ட்ஃபோலியோவில் சரியான அளவில் மட்டுமே முதலீடு செய்வதும் பாதுகாப்பான அணுகுமுறையாகும்.