விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு
விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு விரைவில் பதிவு செய்யத் தொடங்கும் என்று விவசாய செயலாளர் தேவேஷ் சதுர்வேதி திங்கள்கிழமை தெரிவித்தார். அவுட்லுக் அக்ரி-டெக் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிடிஐயிடம் பேசிய சதுர்வேதி, பதிவு செயல்முறைக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் இது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். "அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து கோடி விவசாயிகளை பதிவு செய்வதே எங்கள் இலக்கு" என்றும் அவர் கூறினார். இந்த முயற்சியானது அரசாங்கத்தின் ரூ. 2,817 கோடி டிஜிட்டல் வேளாண்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
19 மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது
முன்னதாக இந்த திட்டத்தின் முன்னோட்டம் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. ஏற்கனவே 19 மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன என்றும், விவசாயிகளின் பதிவேடு உருவாக்கப்பட்டவுடன், பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதார் போன்ற தனித்துவமான ஐடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு எம்எஸ்பி மற்றும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவசாயத் திட்டங்களை அதிக சிரமமின்றி அணுக இந்த தனித்துவமான ஐடி உதவும் என்று சதுர்வேதி கூறினார். இந்த மாத துவக்கத்தில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகவே இந்த ID கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.