பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்
பெண் ஊழியர்களை ஈர்த்து, தக்கவைத்துக்கொள்ளும் நோக்கதோடு, இந்தியாவில் இயங்கும் உலக நிதி நிறுவனங்கள், அரிதாகக் காணப்படும் மகப்பேறு சலுகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் உள்ள வயது வந்த பெண்களில் கால்வாசி பேருக்கும் குறைவானவர்களே வேலைக்கு செல்கிறார்கள். இது உலக அரங்கில் மிகக் குறைவான சதவீதமாகும். எனவே, இந்திய பெண்களை ஊக்கப்படுத்தும் மகப்பேறு சலுகைகளை உலக வங்கிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், HSBC ஹோல்டிங்ஸ் Plc நிறுவனம், அதன் பெண் ஊழியர்களின் குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை நிறுவனம் மூலமாக சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், கர்ப்பிணிப் பணியாளர்கள் பயணம் செய்வதற்கு தேவையான டாக்ஸி வாடகையை இலவசமாக வழங்குகிறது.
மகப்பேறு விடுப்புக்கு இணையாக புதிய தந்தைமார்களுக்கும் சலுகை
சிட்டிகுரூப் இன்க் நிறுவனம், மகப்பேறு விடுப்பு முடிந்த பிறகும் ஒரு வருடம் வரை புதிய தாய்மார்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறியுள்ளது. வேலை செய்யும் கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தபட்சம் 26-வாரங்கள் முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள மோர்கன் ஸ்டான்லியில் பணிபுரியும் கர்ப்பிணிப் பணியாளர்கள் தங்கள் கடைசி மூன்று மாதங்களில் வேலைக்கு வருவதற்கும் செல்வதற்கும் டாக்ஸி வாடகையை நிறுவனத்திடமே பெற்று கொள்ளலாம். இந்த நிறுவனம் புதிய தந்தைமார்களுக்கு 16-வாரங்கள் வரை விடுமுறையையும் வழங்குகிறது. சிட்டிகுரூப் நிறுவனம், புதிய தந்தைமார்களுக்கான விடுப்புப் சலுகைகளை அடுத்த ஆண்டு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மகப்பேறு விடுப்புக்கு இணையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.