வாரிசுகளுக்கு வழிவிடும் வகையில் 8 ஆண்டுகளில் படிப்படியாக ஓய்வு பெற அதானி திட்டம்
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு, தற்போது 62 வயதாகும் நிலையில், வாரிசுகளுக்கு வழிவிடும் வகையில், அடுத்த 8 ஆண்டுகளில் படிப்படியாக ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ப்ளூம்பெர்க்கில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அதானி 70 வயதில் பதவி விலக திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌதம் அதானி தனது வாரிசு திட்டத்தைப் பற்றி அதில் அளித்த பேட்டியில், வணிக நிலைத்தன்மைக்கு வாரிசுகளுக்கு நிர்வாகம் கைமாற்றப்படுவது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாற்றம் இயற்கையானதாக எந்தவித சிக்கலும் இல்லாமல் நடைபெற வேண்டும் என விரும்புவதால், இதற்கான தேர்வை தனது வாரிசுகளிடமே விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கௌதம் அதானி ஓய்வுக்கு பிறகு நிறுவனத்தின் எதிர்காலம்
தற்போது, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதனம் $213 பில்லியன் ஆகும். இது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிமெண்ட், சூரிய ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது. அதானியின் வாரிசாக அவரது இரண்டு மகன்கள் கரண், ஜீத் மற்றும் இரண்டு மருமகன்கள் பிரணவ், சாகர் உள்ள நிலையில், அவர்களிடம் வணிகங்களைப் பிரித்து தனித்தனியாக நடத்த விரும்புகிறீர்களா அல்லது ஒன்றாக நடத்த விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு நால்வரும் தான் பதவி விலகிய பிறகும் நிறுவனத்தை ஒரு குடும்பமாக நடத்த விரும்புவதாக கூறியதாக அதானி தெரிவித்துள்ளார். இதனால், அம்பானி குழுமம் சந்தித்ததை போன்ற ஒரு பிரிவை அதானி குழுமம் சந்திக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.