9 பில்லியன் டாலர்களுக்கும் மேல் அந்நிய முதலீட்டை வாரிக்குவித்த இந்திய அரசு பத்திரங்கள்
இந்திய அரசாங்கப் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 9 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இந்தத் தொகையானது 2023ஆம் ஆண்டுக்கான மொத்த முதலீட்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு இந்தப் பத்திரங்களில் மொத்தமாக $8.21 பில்லியன் அந்நிய முதலீடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL) தரவுகளின் பகுப்பாய்வு மூலம் இந்த எண்ணிக்கை தெரியவந்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் 2023 இல் ஜேபி மோர்கன் குறியீட்டில் உள்நாட்டு இறையாண்மைக் கடனைச் சேர்த்ததன் மூலம் இதில் அந்நிய முதலீடு அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. ஜேபி மோர்கன் நடவடிக்கைக்கு பிறகு, அரசாங்கப் பத்திரங்களுக்கு $13.26 பில்லியன் முதலீடு வந்துள்ளது.
அரசுப் பத்திரங்கள் தொடர்பான RBIயின் புதிய கொள்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் ஒரு கொள்கை மாற்றத்தை அறிவித்தது. இது 14 ஆண்டு மற்றும் 30 ஆண்டுகளுக்கான அனைத்து புதிய அரசுப் பத்திரங்களையும் FAR எனப்படும் முழுமையாக அணுகக் கூடிய பாதை தொகுப்பிலிருந்து விலக்குவதாகக் கூறியது. இந்த முடிவு குறியீட்டில் உள்ள உள்ளூர் பத்திரங்களின் சராசரி முதிர்ச்சியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஜேபி மோர்கன் குறியீட்டில் உள்ள இந்தியப் பத்திரங்கள் சராசரியாக 10.4 ஆண்டுகள் முதிர்வைக் கொண்டுள்ளன. இது வளர்ந்து வரும் சந்தைகளில் மிக உயர்ந்ததாகும். ரிசர்வ் வங்கியின் கொள்கை மாற்றம் இருந்தபோதிலும், இந்தியாவைப் பற்றிய பணச் சந்தையில் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.