Loading...
நவம்பர் 15-க்குள் இதை செய்யாவிட்டால் அபராதம்; நிறுவனங்களுக்கு EPFO முக்கிய எச்சரிக்கை
நிறுவனங்களுக்கு EPFO முக்கிய எச்சரிக்கை

நவம்பர் 15-க்குள் இதை செய்யாவிட்டால் அபராதம்; நிறுவனங்களுக்கு EPFO முக்கிய எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2026
04:14 pm

செய்தி முன்னோட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு முக்கிய நினைவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 12 அன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2026 அக்டோபர் ஊதிய மாதத்திற்கான மின்னணு சலான் மற்றும் ரிட்டர்ன் (ECR) தாக்கல் செய்து, அதற்குரிய பிஎஃப் (PF) தொகையை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அவசியம்

ஊழியர்களின் கணக்கில் சரியான நேரத்தில் பணம் வரவு வைக்கப்பட வேண்டியதன் அவசியம்

மாதாந்திர மின்னணு ரிட்டர்ன் (ECR) என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்புகளை நிறுவனங்கள் முறையாக பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணமாகும்.

நிறுவனங்கள் இதனைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள், ஊதியக் கணக்கீடுகள் மற்றும் பிஎஃப் தொகை ஆகியவற்றை துல்லியமாக சரிபார்க்க வேண்டும்.

குறித்த காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்துவதன் மூலமே, தகுதியுள்ள அனைத்து ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளிலும் மாதந்தோறும் சரியான நேரத்தில் பணம் வரவு வைக்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.

அபராதம்

நவம்பர் 15 காலக்கெடுவைத் தவறவிட்டால் ஏற்படும் அபராதம் மற்றும் வட்டிச் சுமை

நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ECR தாக்கல் மற்றும் கட்டணத்தை செலுத்தத் தவறும் நிறுவனங்கள் கடுமையான நிதி விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இபிஎஃப் சட்ட விதிகளின்படி, தாமதமாக செலுத்தப்படும் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வட்டி மற்றும் அபராதத் தொகை விதிக்கப்படும்.

எனவே சட்டப்பூர்வ கடமைகளை முறையாக நிறைவேற்றவும், தேவையற்ற தாமதக் கட்டணங்களைத் தவிர்க்கவும் அனைத்து நிறுவனங்களும் காலக்கெடுவுக்குள் பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அறிவுரை

கடைசி நேரத் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே தாக்கல் செய்ய அறிவுரை

இறுதி நாளான நவம்பர் 15 வரை காத்திருக்காமல் முன்கூட்டியே ரிட்டர்ன் தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

கடைசி நேரத்தில் ஒரே சமயத்தில் பல நிறுவனங்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது தரவு சரிபார்ப்பு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முன்கூட்டியே பணிகளைத் தொடங்கினால் இத்தகைய தொழில்நுட்பத் தடைகளை எளிதில் சரிசெய்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணத்தை வெற்றிகரமாக செலுத்தி முடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT