டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி.. 16 பில்லியன்கள் வரை குறைந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா. அந்த முடிவுகளானது முதலீட்டாளர்களின் எதிர்பார்த்த அளவில் இல்லாததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன. டெல்லாவின் மூன்றாம் காலாண்டு வாகன விற்பனையானது, முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாதது மட்டுமில்லாமல் முந்தைய காலாண்டை விட 6.67% சரிவையும் சந்தித்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனப் பங்குகள் 9.3% சரிவைச் சந்தித்திருக்கின்றன. டெஸ்லா நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் சற்று சரிவை சந்தித்திருக்கிறது.
சரிவைச் சந்தித்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு:
டெஸ்லா நிறுவனத்தின் 13% பங்குகளை தன்வசம் வைத்திருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். இந்த பங்குகளே அவரின் பெரும்பான்மையான சொத்து மதிப்பிற்கும் காரணமாக இருக்கின்றன. எனவே, டெஸ்லாவின் பங்கு மதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் 16.1 பில்லியன் டாலர்களை வரை குறைந்திருக்கிறது. எனினும், 209.6 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியிலேயே நீடித்து வருகிறார் எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரான்சை சேர்ந்த பெர்னார்டு அர்னால்டின் சொத்து மதிப்பு 173 பில்லியன் டாலர்கள் தான்.