எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்
ஒன்பது மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை இழந்துள்ளார். திங்களன்று டெஸ்லா இன்க். பங்குகள் 7.2% சரிந்ததையடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $197.7 பில்லியனாகவும், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியனாகவும் உள்ளது. அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்(60), 2021ஆம் ஆண்டுக்கு பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து உயர்ந்து வரும் அமேசான் பங்குகள்
அமேசான் மற்றும் டெஸ்லா பங்குகள் எதிரெதிர் திசையில் நகர்வதால், எலான் மஸ்க் மற்றும் பெசோஸ் இடையேயான சொத்து மதிப்பின் இடைவெளி, ஒரு கட்டத்தில் $142 பில்லியன் அளவுக்கு இருந்தது. இரண்டு நிறுவனத்தின் பங்குகளும் அமெரிக்க பங்குச் சந்தைகளை உயர்த்திய அற்புதமான பங்குகளாக இருந்தாலும், அமேசான் பங்குகள் 2022இன் பிற்பகுதியில் இருந்து இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. ஆனால், டெஸ்லா 2021இல் இருந்த அதன் சாதனை உச்சத்திலிருந்து சுமார் 50% குறைந்துள்ளது. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையிலிருந்து வரும் ஏற்றுமதிகள் சரிந்ததை அடுத்து, திங்களன்று டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதற்கிடையில், கொரோனா தொற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தே ஆன்லைன் விற்பனை வளர்ச்சி அடைந்து வருவதால் அமேசான் நிறுவன பங்குகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன.