1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் சாதனை: இந்தியாவின் ஜிடிபியில் 25% அளவு சொத்து
செய்தி முன்னோட்டம்
விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதித்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக 1 டிரில்லியன் டாலர் (சுமார் 84 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இந்த மாபெரும் வணிக மைல்கல் உலகளாவிய நிதிச் சந்தைகளில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ப்ளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனங்களின் தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு முன்பாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 971 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது பங்குச்சந்தை வர்த்தகத் தொடக்கத்திற்குப் பிறகு அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
வளர்ச்சி
வரலாறு காணாத ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ
மஸ்க்கின் இந்தத் தனிநபர் சொத்து மதிப்பு, Semiconductor chip உற்பத்தியின் மையமாகத் திகழும் தைவான் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பை விட(976.7 பில்லியன் டாலர்) அதிகமாகும். மேலும், இது இந்தியாவின் GDP(4.15 டிரில்லியன் டாலர்) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கிற்கு(25%) சமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாகக் கருதப்படும் ஸ்பேஸ்எக்ஸ் IPO மூலம் சுமார் 75 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.8 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. மஸ்க் வசம் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு மட்டும் தற்போது 866 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுவே அவரது சொத்து மதிப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.