அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான நமஸ்தே லெபாரட்டரீஸ், டெர்மோவிவா ஸ்கின் எசன்சியல்ஸ் மற்றும் டாபர் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள நீதிமன்றங்களில் மேற்கூறிய நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிறுவனங்களின் குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த தயாரிப்பானது கருப்பை புற்றுநோய் மற்றும் பிற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகானங்களிலும் மேற்கூறிய மூன்று நிறுவனங்கள் மீதும் சேர்த்து 5.400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, அவற்றை MDL (Multi District Litigation) என ஒரே வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் டாபர்:
இந்த வழக்குகளானது தற்போது தொடக்க நிலையிலேயே இருப்பதாக தெரிவித்திருக்கும் டாபர் நிறுவனம், தங்களது துணை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்திருக்கிறது. மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாத ஆய்வு முடிவுகளை வைத்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இது எனவும் குறிப்பிட்டிருக்கிறது டாபர் நிறுவனம். இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததைத் தொடர்ந்து, தங்கள் தரப்பில் வாதாடுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம். இந்த வழக்கின் முடிவுகளால் ஏற்படும் நிதி இழப்புகளை இப்போதே கூற முடியாது என தெரிவித்திருக்கிறது டாபர் நிறுவனம். எனினும், இந்த வழக்குகளை எதிர்கொள்ளும் பொருட்டு ஏற்படும் நிதி இழப்புகளே அதிகமாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.