தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களின் கடன் தகவல்கள் குறித்த புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கடன் தகவல்கள் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதன்படி, சிபில், ஈக்விஃபேக்ஸ், எக்ஸ்பெரியன் மற்றும் CRIF உள்ளிட்ட கடன் தகவல் நிறுவனங்கள் அல்லது பிற கடன் வழங்கும் நிறுவனங்களானது, தனிநபர்களின் கடன் தகவல் குறித்த புகாரைப் பெறும் பட்சத்தில், 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வளிக்க வேண்டும். தனிநபரின் கடன் தகவல் குறித்த புகாருக்கு தீர்வளிப்பது மட்டுமல்லாமல் 30 நாட்களுக்குள் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றியும் இருக்க வேண்டும்.
நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்:
மேற்கூறிய வகையில் 30 நாட்களுக்குள் புகாரை நிவர்த்தி செய்யவோ அல்லது அதனை பதிவேற்றவோ தவறும் பட்சத்தில் புகார் அளித்தவருக்கு, கூடுதலாக எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதமாகச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. ஒரு தனிநபர் புகார் அளித்த பின்பு, கடன் தகவல் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கொடுக்கத் தவறும் பட்சத்தில், கடன் வழங்கும் நிறுவனங்களே மேற்கூறிய வகையில் புகார் அளித்தவருக்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. கடன் தகவல் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.