வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்வு: அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை அதிகரிக்கிறது
செய்தி முன்னோட்டம்
வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஏசி, LED டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 5% முதல் 8% வரை உயர்த்த நுகர்வோர் மின்சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற உலோகங்களின் விலை உயர்வு, கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை ஏற்றம், சரக்குக் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்ட நாணய மதிப்பு ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் இத்துறையில் மேற்கொள்ளப்படும் 3-வது விலை உயர்வு இதுவாகும்.
விலை உயர்வு
எந்தெந்தப் பொருட்கள் எவ்வளவு உயர்கின்றன?
ஏசி: ஏசி தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் தாமிரத்தின் விலை உயர்வால், ஏசிகளின் விலை 5% முதல் 8% வரை உயருகிறது.
டிவி & பிற உபகரணங்கள்: வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ் மற்றும் எல்.இ.டி டிவிகளின் விலை 3% முதல் 4% வரை உயர்த்தப்படவுள்ளன.
திரை அளவு சார்ந்த டிவி விலை உயர்வு: சிறிய திரை அளவு கொண்ட டிவிகளின் விலை 20% வரையிலும், பெரிய திரை டிவிகளின் விலை 10% வரையிலும் உயரக்கூடும் என Videotex நிறுவனம் தெரிவித்துள்ளது.
விற்பனைத் தாக்கம்
நிறுவனங்களின் நிலைப்பாடு & பண்டிகைக் கால விற்பனைத் தாக்கம்
ப்ளூ ஸ்டார், கோத்ரெஜ், ஹையர், டைகின், எல்.ஜி, சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் 4% முதல் 10% வரையிலான விலை உயர்வை உறுதிப்படுத்தியுள்ளன.
பானாசோனிக் நிறுவனம் சந்தை நிலவரத்தை மதிப்பிட்டு வருகிறது.
இருப்பினும், டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்ட பழைய சரக்குகள் கையிருப்பில் உள்ளதால், தீபாவளி வரை பெரும்பாலான பொருட்கள் பழைய விலையிலேயே கிடைக்கும் என்றும், தீபாவளிக்கு பிறகே முழுமையான புதிய விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.