Loading...
ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு நிம்மதி! வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 வரை குறைப்பு

ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு நிம்மதி! வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
10:41 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் சிலிண்டருக்கு சுமார் ₹200 வரை குறைத்துள்ளன. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவி வந்த போர்ப் பதற்றம் மற்றும் சர்வதேச எரிபொருள் நெருக்கடி சற்று தணிந்துள்ள நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வணிக சிலிண்டரின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமானங்களில் பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருள் விலை லிட்டருக்கு ₹5 உயர்த்தப்பட்டு ₹115 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விலை நிலவரம்

மெட்ரோ நகரங்களில் புதிய எல்பிஜி சிலிண்டர் விலைகள்

புதிய விலை திருத்தத்தின்படி, தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ₹192 குறைந்து ₹2,738 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் அதிகபட்சமாக ₹209 குறைக்கப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை ₹2,872.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மும்பையில் ₹194 குறைக்கப்பட்டு ₹2,691.50 ஆகவும், சென்னையில் ₹200 குறைக்கப்பட்டு ஒரு வணிக சிலிண்டரின் விலை ₹2,906 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த அதிரடி விலை குறைப்பு உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாட்டு செலவை பெருமளவில் குறைக்கும்.

வீட்டு சிலிண்டர்

வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் 5 கிலோ எஃப்.டி.எல் விலை

வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் பழைய விலையிலேயே தொடரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

அதேவேளையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்குப் பயன்படும் 5 கிலோ எஃப்.டி.எல் (Free Trade LPG) சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ₹46.50 வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெல்லியில் 5 கிலோ எஃப்.டி.எல் சிலிண்டர் ₹762 ஆகக் கிடைக்கிறது.

கடந்த இரண்டு தவணைகளில் இந்த சிலிண்டரின் விலை மொத்தமாக ₹60 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பின்னணி

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் பின்னணி

கடந்த ஜூலை 1 அன்று வணிக சிலிண்டர் விலை ₹183 வரை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகத் துறையினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

முன்னதாக மார்ச் மாதம் முதல் நான்கு தவணைகளில் வணிக சிலிண்டர் விலை ₹1,345 வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான ஜெட் எரிபொருள் விலை லிட்டருக்கு ₹5 உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் விமானக் கட்டணங்கள் சிறிதளவு உயருமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே எழுந்துள்ளது.

ADVERTISEMENT