'விவேக்ஸ்' கடைகள் திடீரென மூடப்பட்டது ஏன்? பின்னணியில் அதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்னை மக்களின் நடுத்தர குடும்ப கனவுகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்த்தி செய்து வந்த பிரபல 'விவேக்ஸ்' ரீடைல் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தையும் முழுமையாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தகவல் குறிப்பாக 80 மற்றும் 90-களில் வாழ்ந்த சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி இந்து வெளியிட்ட தகவலின்படி, நிர்வாகக் குடும்பத்திற்குள் நிலவிய மாறுபட்ட கருத்துக்களே வர்த்தகத்தை மூடுவதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. 1965 முதல் துணை நின்ற வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நிர்வாகம், அனைத்து ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் வழங்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் அனைத்து ஆர்டர்களும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக உறுதி அளித்துள்ளது.
பயணம்
விவேக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுப் பயணம்
1965-ஆம் ஆண்டு மயிலாப்பூரில் பி.ஏ.லட்சுமி நாராயண செட்டி என்பவரால் முதல் விவேக்ஸ் கடை தொடங்கப்பட்டது.
இவரது மறைவுக்குப் பின் இவரது சகோதரர் பி.ஏ.கோதண்டராமன் செட்டி நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
1969-இல் புரசைவாக்கத்திலும், 1980-இல் தி.நகரிலும் கடைகள் திறக்கப்பட்டன.
குறிப்பாக தி.நகர் கிளை வெளிநாட்டு பிராண்ட் பொருட்களை விற்பனை செய்து, பணக்காரர்கள் முதல் மிடில் கிளாஸ் மக்கள் வரை அனைவரது விருப்பமான ஷாப்பிங் தளமாக மாறியது.
சாதனைகள்
தமிழ்நாட்டின் வர்த்தகத் துறையில் விவேக்ஸ் செய்த சாதனைகள்
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக புத்தாண்டு தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தியது விவேக்ஸ் தான்.
90-களில் புதிய ஐபோன் வாங்குவது போல, புத்தாண்டு சலுகையில் பொருட்கள் வாங்க விவேக்ஸ் வாசலில் மக்கள் விடியவிடிய காத்திருந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
வெறும் 1 ரூபாய் செலுத்தி பொருளை வாங்கிச் சென்று, மீதி தொகையை மாதத் தவணையில் செலுத்தும் முறையை அறிமுகம் செய்தது.
இதற்காக 1991-இல் 'விவேக் ஹையர் பர்சேஸ் அண்ட் லீசிங் கம்பெனி லிமிடெட்' என்ற NBFC நிறுவனத்தைத் தொடங்கி, பின்னாளில் அதை அமெரிக்காவின் AIG குரூப்பிற்கு விற்றனர்.
குடும்ப வட்டாரத்தை சேர்ந்த சிலர் தெரிவிக்கையில், இது நிரந்தர மூடல் அல்ல, தற்காலிக நிறுத்தம் மட்டுமே என்றும், விரைவில் விவேக்ஸ் மீண்டும் புதிய பொலிவுடன் களமிறங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.