
உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை, டண்ணுக்கு ரூ.6,700ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைகள், சர்வதேச பொருளாதாரா அல்லது பிற காரணிகளால் திடீரென கூடுதல் லாபத்தைப் பெறும் போது, அந்தக் கூடுதல் லாபத்தின் மீது மட்டும் விண்டுஃபால் வரியை மத்திய அரசு விதிப்பது வழக்கம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், தற்போது உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 1 மில்லியன் பேரல்களைக் குறைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
வணிகம்
ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் மீதான வரி நிலவரம்:
உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை ரூ.6-ல் இருந்து, ரூ.5.50 ஆக குறைத்திருக்கிறது மத்திய அரசு.
அதேபோல், ஜெட் எரிபொருள் மீதான கூடுதல் ஏற்றுமதி வரியையும், ரூ.4-ல் இருந்து ரூ.3.50 ஆகக் குறைத்திருக்கிறது மத்திய அரசு.
டீசல் மற்றும் ஜெட் எரிபொருளைப் போல பெட்ரோல் மீது கூடுதல் வரி எதையும் இதுவரை மத்திய அரசு விதிக்கவில்லை. தற்போது அதே நிலையே கடைப்பிடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியாது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது வழக்கம். மேற்கூறிய வரி மாற்றங்கள் யாவும் இன்று முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.