இனி சோப், டூத்பேஸ்ட்டிலும் வெஜ், நான்-வெஜ் அடையாளம்: மத்திய அரசு புதிய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சோப், ஷாம்பூ, டூத்பேஸ்ட் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்கள் தாவர மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டவையா(Vegetarian) அல்லது விலங்கின பொருட்களால் தயாரிக்கப்பட்டவையா(Non-Vegetarian) என்பதை அவற்றின் பேக்கிங்கில் கட்டாயக் குறியீடுகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'சட்ட அளவியல் நான்காவது திருத்த விதிகள், 2026' என்ற பெயரில் செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய அறிவிப்பின்படி, தாவர மூலப் பொருட்கள் பச்சை நிறப் புள்ளி, விலங்கின மூலப் பொருட்கள் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி அச்சிடப்படவேண்டும். இந்தக் குறியீடானது பொருளின் வெளிப்புறப் பேக்கிங்கில் முகப்புப் பகுதியில் மேல் பாகத்தில் தெளிவாகத் தெரியும் வகையில் அச்சிடப்பட வேண்டும்.
பின்னணி
புதிய திருத்தத்தின் சட்டப் பின்னணி
உண்மையில் அழகு சாதன பொருட்களுக்கு பச்சை மற்றும் சிவப்பு புள்ளியிடும் நடைமுறை முதன்முதலில் 2014-ஆம் ஆண்டிலேயே விதி 6(8)-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், கடந்த பிப்ரவரி 2026-இல் டெல்லி உயர்நீதிமன்றம் அழகு சாதனப் பொருட்களின் லேபிளிங் விதிகளில் தெளிவான நடைமுறையைக் கொண்டுவர ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போதைய புதிய திருத்தத்தின் மூலம் பழைய விதி 6(8) நீக்கப்பட்டு, புதிய விதி 6(4A)(d)-ன் கீழ் சட்டப்பூர்வமாக இந்த நடைமுறை வலுப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
பிற கட்டாய விதிகள்
அழகு சாதன பொருட்களுக்கான பிற கட்டாய விதிகளின் பட்டியல்
இந்தியாவில் அழகு சாதன பொருட்கள் மற்றும் கழிப்பறை பொருட்களின் பேக்கிங்கில் பின்வரும் தகவல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்:
1.பொருளின் அதிகாரப்பூர்வ பெயர், தயாரிக்கப்பட்ட இடத்தின் முழு முகவரி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதியாளரின் முகவரி.
2.மெட்ரிக் அளவுகளில் எடை/அளவு, பேட்ச் எண், 'M' எனக் குறிப்பிடப்பட்ட தயாரிப்பு உரிம எண், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி(மாதம் மற்றும் ஆண்டு).
3.அனைத்து வரிகளும் அடங்கிய அதிகபட்ச சில்லறை விலை(MRP), பாதுகாப்பான பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள்.
4.1% -க்கும் அதிகமான அளவில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் அவற்றின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் குறிப்பிடப்பட வேண்டும்.
30 கிராமிற்கும் குறைவான திடப் பொருட்கள் அல்லது 60 மிலி-க்கும் குறைவான திரவப் பொருட்களுக்கு விலக்கு உண்டு).