'பைஜுஸ் ஆஃல்பா' ஹோல்டிங் நிறுவனத்தை, கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்த பைஜூஸ்
கொரோனா காலத்திற்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்து வந்த, இந்தியாவின் முன்னாள் மதிப்புமிக்க ஆன்லைன் கற்றல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவில் தற்போது பல்வேறு நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா காலத்தின் போது இணையவழி கற்றலை அனைவரும் நாடிய நேரத்தில் பல்வேறு சிறு நிறுவனங்களை பலகோடிகள் மதிப்பில் கையகப்படுத்தியது பைஜூஸ். அந்தக் கையகப்படுத்தல்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கடன்களையும் பெற்றிருந்தது பைஜூஸ். 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி) கடனையும், அதற்கான வட்டியையும் செலுத்தத் தவறியது பைஜூஸ் மீது குற்றம் சாட்டியிருந்தன அந்நிறுவனங்கள். அதனைத் தொடர்ந்து தங்களுக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பைஜூஸ்.
தற்போதைய வழக்கு:
முன்னதாக, பைஜூஸ் நிறுவனமானது நிதி உதவிகளை பெறும் மற்றும் மேற்கொள்ளும் பொருட்டு பைஜூஸ் ஆல்ஃபா என்று நிறுவனத்தை ஹோல்டிங் நிறுவனமான உருவாக்கி அதன் இயக்குநராக பைஜூ ரவீந்திரனின் சகோதரரான ரிஜூ ரவீந்திரனையும் நியமித்தது. பைஜூஸ் நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய கடனை செலுத்தத் தவறியதன் காரணமாக ரிஜூ ரவீந்திரனை பைஜூஸ் ஆல்ஃபா நிறுவனத்திலிருந்து நீக்கி, கடன் வழங்கிய நிறுவனங்களின் சார்பாக டிமோத்தி போல் என்பவர் அந்நிறுவனத்தின் இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் கடன் வழங்கும் நிறுவனங்களால் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம் அங்கீகரிக்கப்படாதது என்ற பைஜூஸின் வாதத்தை மறுத்த டெலவேர் நீதிமன்றம், மேற்கூறிய வகையில் புதிய நியமனத்தை மேற்கொள்வதற்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அதிகாரம் இருப்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.