2027-இல் தங்கத்தின் விலை உச்சம் தொடும்! வைரலாகும் பாபா வங்கா கணிப்பு; நிபுணர்கள் சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், 2027 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரும் என பாபா வங்காவின் கணிப்புகள் என இணையத்தில் வைரலாகி வருகின்றன. 2027-இல் ஏற்படவுள்ள உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கடுமையான பணப்புழக்கக் குறைபாடு காரணமாக மக்கள் வங்கியின் மீது நம்பிக்கை இழந்து தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என அந்த செய்திகள் கூறுகின்றன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
உண்மை பின்னணி
பாபா வங்கா கணிப்பும் அதன் உண்மை பின்னணியும்
இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, 2027-இல் இந்தியாவில் 10 கிராம் தங்கம் விலை ரூ.2.1 லட்சம் முதல் ரூ.2.82 லட்சம் வரை உயரும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் பாபா வங்கா தன் வாழ்நாளில் எந்தவொரு கணிப்பையும் எழுத்துப்பூர்வமாக விட்டுச் செல்லவில்லை.
அதனால் இத்தகவல்கள் வாய்வழி செய்திகளாகவும் பிற்காலப் பிரசுரங்களாகவுமே வெளிவந்துள்ளன.
எனவே இத்தொகைகள் சந்தை நிபுணர்களின் அதிகாரப்பூர்வக் கணிப்புகள் அல்ல என்றும், வெறும் யூகித்து பரப்பப்படும் தகவல்கள் மட்டுமே என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிதியமைப்புகள் கணிப்பு
முன்னணி சர்வதேச நிதியமைப்புகள் வெளியிட்ட கணிப்புகள்
பாபா வங்காவின் கணிப்புகள் ஒருபுறமிருக்க, சர்வதேசப் புகழ்பெற்ற நிதியமைப்புகளும் 2027-இல் தங்கம் விலை கணிசமாக உயரும் எனக் கணித்துள்ளன.
ஜேபி மோர்கன் நிறுவனம் 2027 இறுதியிற்குள் தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 6,300 டாலராக (10 கிராம் ரூ.2,13,125) உயரும் எனக் கூறியுள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர் கொள்முதல் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சந்தை நிலவரம்
யுபிஎஸ், டாய்ச் வங்கி மற்றும் இந்திய சந்தை நிலவரம்
அதேபோல யுபிஎஸ் வங்கி 2027 முதல் பாதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 டாலராகவும் (10 கிராம் ரூ.1,69,049), டாய்ச் வங்கி 4,600 டாலராகவும் உயரும் என மதிப்பிட்டுள்ளன.
இந்திய உள்நாட்டு சந்தையில் 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1.46 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை நிலவி வருகிறது.
செர்னோபில் விபத்து, இளவரசி டயானா மறைவு, 9/11 தாக்குதல் போன்றவற்றை சரியாக கணித்ததாகக் கூறப்படும் பாபா வங்காவின் இந்த 2027 கணிப்பும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.