ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை வாங்க அமேசான் முயற்சி
இன்ஸ்டாமார்ட்டை வாங்குவதற்காக விநியோக நிறுவனமான ஸ்விக்கியுடன் அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 1.25 பில்லியன் டாலர் பொது வழங்கலுக்கான வரைவு ஆவணங்களை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில்(SEBI) ஸ்விக்கி ரகசியமாக தாக்கல் செய்ததை அடுத்து இந்த செய்தி வெளியாகி உள்ளது. எகனாமிக் டைம்ஸின் கூற்றுப்படி, "தற்போதைய ஐபிஓவின் போது பங்குகளை வாங்குவதில் அல்லது இன்ஸ்டாமார்ட்டை வாங்குவவதில் அமேசான் ஆர்வம் காட்டி வருகிறது." ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் வழங்கப்படவில்லை.
ஸ்விக்கியை மொத்தமாக வாங்குமா அமேசான்?
அமேசான் மற்றும் ஸ்விக்கிக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன. இந்த விவாதங்களில் முன்னேறத்தை காண சியாட்டிலிலுள்ள அமேசான் தலைமையகத்திலிருந்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் சிக்கலான கட்டமைப்பின் காரணமாக ஆரம்ப பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியாது என்றும் ஆதாரங்கள் கூறியுள்ளன. ஸ்விக்கி அதன் இன்ஸ்டாமார்ட்டை மட்டுமே விற்க வாய்ப்பில்லை என்றும், வளர்ச்சி குறைந்து வரும் உணவு விநியோக சந்தையில் அமேசான் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. ஸ்விக்கியின் மொத்த மதிப்பு $10-12 பில்லியனாக இருப்பதால், அந்த முழு நிறுவனத்தையும் கையகப்படுத்துவது அமேசானுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.