LOADING...
விமானக் கட்டணங்களை உயர்த்தும் ஏர் இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது?
ஏர் இந்தியா

விமானக் கட்டணங்களை உயர்த்தும் ஏர் இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது?

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
10:10 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக விமானக் கட்டணங்களின் விலை உயரலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் விமான கட்டண உயர்வை தற்போது அமல்படுத்தியிருக்கிறது. மூன்று கட்டங்களாக விமான கட்டண உயர்வை அமல்படுத்துகிறது ஏர் இந்தியா. எரிபொருள் விலை உயர்வு காரணமாக விலைகள் உயர்த்தப்படும் நிலையில், எரிபொருள் கூடுதல் கட்டணமாகவே இதனை வசூலிக்கிறது அந்நிறுவனம். ஏர் இந்தியாவின் விமானக் கட்டணங்கள் ஒவ்வொரு கட்டமாக எவ்வளவு உயர்த்தப்படவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமான கட்டண உயர்வு

ஏர் இந்தியாவின் முதல் கட்ட கட்ட உயர்வு மார்ச் 12 முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிற்குள்ளும், SAARC நாடுகளுக்கும் இனி எரிபொருள் கூடுதல் கட்டணமாக ரூ.399 வசூலிக்கவுள்ளது ஏர் இந்தியா. மேற்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10 அமெரிக்க டாலர்கள் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தற்போதே 40 அமெரிக்க டாலர்கள் வரை கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறது. அதனை 60 அமெரிக்க டாலர்களாக உயர்த்தியிருக்கிறது. ஆப்பிரிக்காவிற்கு இதுவரை 60 டாலர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில், அதனை 90 டாலர்களாக உயர்த்தியிருக்கிறது.

விமானக் கட்டணம்

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கட்டண உயர்வு

இரண்டாம் கட்டமாக மார்ச் 18 முதல், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் விமானக் கட்டணங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வை அமல்படுத்துகிறது ஏர் இந்தியா. ஐரோப்பாவிற்கு செல்லும் விமானங்களுக்கு இதுவரை 100 டாலர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், இனி 125 டாலர்களாக வசூலிக்கப்படவுள்ளது. வடஅமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு 150 டாலர்களில் இருந்து 200 டாலர்களாக எரிபொருள் கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் கட்ட கட்டண உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மூன்றாம் கட்ட விமான கட்டண உயர்வானது, ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட கிழக்கே இருக்கும் நாடுகளுக்கானதாக இருக்கும்.

Advertisement