"பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கை", ஹின்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி
அதானி வணிகக் குழுமத்தின் 2023-ம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்துப் பேசியிருக்கிறார் கௌதம் அதானி. தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களம் விளைவிக்கவே, பொய்யான அந்த அறிக்கையை வெளியிட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். அதானி குழும நிறுவனங்கள், பங்குச்சந்தை மற்றும் கணக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹின்டன்பர்க் நிறுவனம். அதானி குழுமத்தின் மீதான அந்நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்தன. மேலும், இந்த அறிக்கையின் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தால் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டில் இருந்து பினவாங்கியது அதானி குழுமம்.
கௌதம் அதானி கூறியது என்ன?
"பொய்யான தகவல்கள் மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களைால் ஆன அறிக்கை அது" எனத் தெரிவித்திருக்கும் அதானி, தங்களுடைய சொந்த லாபத்திற்காகவே ஹின்டன்பர்க் அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். தங்களுடைய நிறுவனம் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து, கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டியிருக்கிறது. ஆனால், யாரும் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை எனத் தெரிவித்திருக்கிறார் அவர். ஹின்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல முறைகேடுகள் நடைபெற்றதா என்பதை ஆராய ஆய்வுக் குழுவொன்றை அமைத்தது உச்சநீதிமன்றம். அந்தக் குழுவானது முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்திருக்கும் நிலையில், "உச்சநீதிமன்றக் ஆய்வுக் குழுவின் முடிவுகள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியிருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.