85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல்
இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது புதிய வருமான வரிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. வருமான வரித்தாக்கலை எளிமையாக்கும் பொருட்டு புதிய வருமான வரிமுறை அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது மத்திய அரசு. எனினும், பழைய வருமான வரிமுறையில் பல்வேறு வரிவிலக்குகள் மற்றும் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய வருமான வரிமுறையில் பெரிய அளவில் வரிவிலக்குகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படவில்லை. கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்திருக்கிறது. இந்த ஆண்டு எவ்வளவு பேர் புதிய வருமான வரிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த அறிக்கை ஒன்றை வருமான வரித்தாக்கல் செய்வதற்கான சேவையை வழங்கி வரும் க்ளியர் (Clear) நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
க்ளியர் நிறுவனத்தின் அறிக்கை:
க்ளியர் நிறுவனம் தங்களுடைய அறிக்கையில், 15% நபர்கள் மட்டுமே புதிய வருமான வரிமுறையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், 85% நபர்கள் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். பழைய வருமான வரிமுறையில், HRA, LTA, 80C, மற்றும் 80D உள்ளிட்ட பல்வேறு வரிச்சலுகைகள் இருப்பதையடுத்து, பலரும் அதனையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். 80C-யின் கீழ் வழங்கப்படும் வருமான வரிச் சலுகையை 55% பேர் முழுவதுமாகவும், 17% பேர் ரூ.50,000 வரையிலும், 10% பேர் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை பயன்படுத்தியிருப்பதாகவும் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது க்ளியர். 80D-யின் கீழ் கிடைக்கும் வரிச்சலுகையை 50% பேரும், 80CCD(1B)-யின் கீழ் கிடைக்கும் வரிச்சலுகையை 20% பேரும் பயன்படுத்தியிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.