விவசாயத்துறையில் 7 புதிய திட்டங்கள்; ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான ஏழு பெரிய திட்டங்களுக்கு சுமார் ₹14,000 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று (செப்டம்பர் 2) ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். விவசாயக் கல்வி மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த ₹2,291 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் அவற்றின் உற்பத்திக்காக ₹ 1,702 கோடி திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தோட்டக்கலை மற்றும் இயற்கை வள மேலாண்மைக்கான ஒதுக்கீடு
தோட்டக்கலைக்கான நிலையான வளர்ச்சிக்காக ₹860 கோடி மதிப்பிலான மற்றொரு பெரிய திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கிரிஷ் விஞ்ஞான் கேந்திராவுக்கு ₹1,202 கோடி மற்றும் இயற்கை வள மேலாண்மைக்கு ₹1,115 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக விவயசாயத் துறையில் ஏழு திட்டங்களுக்கும் சேர்த்து ₹13,960 கோடிக்கு மேல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த திட்டங்களுடன் சேர்த்து மும்பை மற்றும் இந்தூர் இடையேயான 309 கிமீ ரயில் பாதை திட்டத்திற்கு ₹18,036 கோடி ஒதுக்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் இடையே ஆறு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது.