எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி
பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கால் பதித்து புதிய வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்க தயாராகி வருகிறது. தங்களது புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்க சீனாவைச் சேர்ந்த பிரில்லியன்ஸ் ஆட்டோ குரூப் மற்றும் செர்ரி ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஷாவ்மி. ஷாவ்மி என்ற நிறுவன பெயரின் கீழேயே புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். எனினும், எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான அனுமதி எதையும் இன்னும் ஷாவ்மி நிறுவனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மியின் திட்டம் என்ன?
உலகளவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் சீன நிறுவனங்கள் கோலோச்சி வருவதைத் தொடர்ந்தே ஷாவ்மி நிறுவனமும் அக்களத்தில் குதிக்க விரும்புகிறது. மேலும், எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க, சீன அரசாங்கமும் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து ஆதரவு அளித்து வருவதும் ஒரு காரணம். எலெக்ட்ரிக் கார்களை மேம்படுத்தவும், தயாரிக்கவும் 10 மில்லியன் டாலர்களை ஷாவ்மி முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஷாவ்மி நிறுவனத்தின் துணை-நிறுவனர் லெய் ஜூன். புதிய துறையில் களமிறங்க முடிவெடுத்திருக்கும் போதிலும், அந்தத் துறையில் கால் பதிக்கத் தேவையான அனுமதிகளுக்கு சீன அரசிடம் விண்ணப்பித்துக் காத்திருக்கிறது ஷாவ்மி. எலெக்ட்ரிக் வாகன துறையில் நிலவும் போட்டியைச் சமாளித்து வெற்றிக் கொடி நாட்டுமா ஷாவ்மி?