
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு?
செய்தி முன்னோட்டம்
வரும் ஜூன் 14-ல் 2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ன் பழைய மாடலுக்கும், புதிய மாடலுக்கும் என்ன மாறியிருக்கிறது? பார்க்கலாம்.
முந்தைய மாடலை விட தோற்றம், வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸ் என அனைத்து வகைகளிலும் 160R-ஐ ஹீரோ மேம்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க நிற முன்பக்க போர்க்ஸ், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் வசதியுடன் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர் ஆகியவை புதிய வசதிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
மேலும், கிளாஸியான ஸ்டெல்த் ப்ளாக் கலர் ஆப்ஷனிலும் வெளியாகவிருக்கிறது ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160R.
ஹீரோ
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
தற்போது விற்பனை செய்யப்படும் 160R-ல் 5-ஸ்பீடு கியர்பாக்ஸூன்ட இணைக்கப்பட்ட, 14.9hp பவர் மற்றும் 14Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு வால்வுகள் கொண்ட, ஏர்-கூல்டு 163சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புதிய அப்டேட் செய்யப்பட்ட பைக்கிலும் இதன் இன்ஜின் தான் என்றாலும், BS6 இரண்டாம் கட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், முந்தைய 2 வால்வுகளுக்குப் பதிலாக, 4 வால்வுகள் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, கூடுதல் பவர் மற்றும் டார்க்கைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை அளித்திருக்கிறது ஹீரோ.
முந்தைய மாடலானது ரூ.1.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.