புதிய C40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது வால்வோ
தங்களது புதிய எலெக்ட்ரிக் காரான 'C40 ரீசார்ஜ்' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது வால்வோ. 2022, ஜூலையில் வெளியான 'XC40 ரீசார்ஜூ'க்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வால்வோ வெளியிடும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இது. 2030-ம் ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான மாறும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது வால்வோ. இந்தியாவில் அதற்கு முன்னதாகவே முழுமையான எலெக்ட்ரிக் கார் விற்பனையாளராகும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். அதன் திட்டத்தில் கடந்தாண்டு வெளியான XC40 ரீசார்ஜூம், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் C40 ரீசார்ஜூம் முக்கியப் பங்கு வகிக்கும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த C40 ரீசார்ஜ் கூப் எஸ்யூவியின் விலையை ஆகஸ்ட் மாதம் அறிவிக்கத் திட்டமிட்டிருக்கும் வால்வோ, அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இதன் டெலிவரியைத் தொடங்கவிருக்கிறது.
C40 ரீசார்ஜ்: எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி
சர்வதேச சந்தைகளில், சிங்கிள் மோட்டார் மற்றும் ரியர் வீல் டிரைவ் கொண்ட வேரியன்ட் மற்றும் இரண்டு மோட்டார்கள் கொண்ட ஆல்-வீல் டிரைவி வேரியன்ட் என இரண்டு வேரியன்ட்களாக C40 ரீசார்ஜை அறிமுகப்படுத்தியிருக்கிறது வால்வோ. இரண்டு மோட்டார்கள் கொண்ட வேரியன்டானது, 402hp பவர் மற்றும் 660Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும், 78kWh பேட்டரியுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் 420கிமீ வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 530கிமீ ரேஞ்சைக் கொண்ட E80 பேட்டரி பேக்குடன் C40 ரீசார்ஜை அறிமுகப்படுத்தியிருக்கிறது வால்வோ. 0-100 கிமீ வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச வேகம் 180கிமீ. கடந்தாண்டு ரூ.56.90 லட்சம் விலையில் XC40 ரீசார்ஜ் மாடலை வால்வே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.