'ID 7 டூரர்' எலெக்ட்ரிக் வேகன் மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வரும் ஃபோக்ஸ்வாகன்
வரும் மாதங்களில் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் வேகனான 'ID 7 டூரர்' மாடலை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன். சில மாதங்களுக்கு முன்பு ID 7 செடான் மாடலை உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். அந்த ID 7 செடான், ID 3 மற்றும் ID 4 ஆகிய வாகனங்கள் கட்டமைப்பட்ட அதே MEB EV பிளாட்ஃபார்மிலேயே இந்தப் புதிய ID 7 டூரர் மாடலையும் ஃபோக்ஸ்வாகன் கட்டமைத்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உட்பக்க இடவசதி மற்றும் பூட் இடவசதி அதிகமாக இருக்கும் வகையில் சற்று நீளமான வீல்பேஸ் கொண்ட வாகனங்களாகவே இந்த பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் வாகனங்கள் தயாாரிக வருகின்றன. ID 7 டூரரும் அதனை ஒத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வாகன் ID 7 டூரர்:
முழுமையான எலெக்ட்ரிக் வாகனமான இதன் ரேஞ்சை அதிகரிக்க ஸ்மூத்தான முன்பக்க பம்பர்களுடன், ஏரேடைனமிக்ஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ஃபோக்ஸ்வாகன். முன்னர் அறிமுகப்படுத்தி ID 7 செடான் மாடலானது சிங்கிள் சார்ஜில் 700 கிமீ ரேஞ்சைக் கொண்டுக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த ID 7 டூரரையும் கிட்டத்தட்ட அதே அளவு ரேஞ்சைக் கொண்டிருக்கும் வகையிலேயே ஃபோக்ஸ்வாகன் வடிவமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வாகனின் பிற ID கார் மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் 77kWh பேட்டரி பேக் தேர்வுடன், கூடுதலாக புதிய 86kWh பேட்டரி பேக் தேர்வு ஒன்றையும் ஃபோக்ஸ்வாகன் இந்த ID 7 டூரரில் அறிமுகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. விரைவில் உலகளாவிய சந்தைகளில் இந்தப் புதிய ID 7 டூரரின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.