இந்தியாவில் கால் பதிக்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோமொபைல் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கால்பதிக்கத் திட்டமிட்டு வருகிறது வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast). இந்தியாவில் டெஸ்லாவிற்குப் போட்டியாக தடம் பதிக்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
உலகளவில் டெஸ்லா மற்றும் டொயோட்டாவிற்கு அடுத்தபடியாக, அதில சந்தை மதிப்பைக் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது வின்ஃபாஸ்ட்.
அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 85 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பைப் பெற்றிருக்கிறது வின்ஃபாஸ்ட். இந்த ஆண்டு தொடக்கத்தில் தான், அமெரிக்காவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை டெலிவரி செய்தது அந்நிறுவனம்.
மேலும், நான்காம் காலாண்டில் ஐரோப்பாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை டெலிவரி செய்யவிருக்கிறது வின்ஃபாஸ்ட்.
ஆட்டோ
தமிழகமா? குஜராத்தா?
வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையான இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கால் தடத்தைப் பதிக்க திட்டமிட்டு வரும் நிலையில், வின்ஃபாஸ்டும் இந்தியாவில் புதிய தொழிற்சாலையைக் கட்டமைக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது.
தற்போது பேச்சுவார்த்த தொடக்கக் கட்டத்திலேயே இருக்கும் நிலையில், தமிழகம் அல்லது குஜராத்தில் தங்களுடைய புதிய தொழிற்சாலையை அந்நிறுவனம் அமைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கும் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யுமா அல்லது ஏற்றுமதி செய்யும் திட்டத்தையும் அந்நிறுவனம் கொண்டிருக்கிறதா போன்ற தகவல்களை இன்னும் அந்நிறுவனம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்தியாவில் முதலீடு செய்து புதிய தொழிற்சாலையை அமைக்க மிகுந்த ஆர்வத்தோடு அந்நிறுவனம் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.