இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன?
மாருதி சுஸூகி நிறுவனமானது சமீபத்தில் தான் ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு புதிய மாடல் கார்களை இந்தியாவில் வெளியிட்டது. மேற்கூறிய வெளியீடுகளைத் தவிர புதிதாக ஒரு மாடலையும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இரண்டு மாடல்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் மாருதி அடுத்து வெளியிடவிருக்கும் கார்கள் என்னென்ன? மாருதி சுஸூகி இன்விக்டோ: தங்களுடைய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடல் ஒன்றை உருவாக்கி அதனை மாருதிக்கும் விநியோகம் செய்யவிருக்கிறது டொயோட்டா நிறுவனம். இந்த புதிய மாடலை இன்விக்டோ என்ற பெயரில் விற்பனை செய்யவிருக்கிறது மாருதி. இந்த புதிய மாடலை வரும் ஜூலை 5-ம் தேதி இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
அடுத்த தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விப்ட்:
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக்கான தங்களுடைய ஸ்விப்ட் மாடலின் மறுவடிவம் செய்யப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி. புதிய ஸ்விப்டை Heartect ப்ளாட்ஃபார்மில் மாருதி தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜினுடன், டொயோட்டாவின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் கொண்டு இந்த காரை மாருதி உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாருதி சுஸூகி டிசையர்: தங்களுடைய டிசையர் மாடலை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விரைவில் வெளியிடவிருக்கிறது மாருதி. ஸ்விப்ட் மாடலின் உள்பக்க டிசைன் மற்றும் வசதிகளை டிசைரிலும் மாருதி கொடுக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விப்டைப் போலவே, டிசையர் மாடலிலும் டொயோட்டாவின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மாருதி. ஸ்விப்டை விட கொஞ்சம் கூடுதலான விலையில் டிசையர் வெளியாகலாம்.