அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹைபிரிட் கார் மாடல்கள்
எரிபொருள் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மத்தியிலான இடைப்பட்ட பிரிவாக ஹைபிரிட் கார்கள் இருக்கின்றன. இந்தியாவில் அதிகளவிலான ஹைபிரிட் மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படுவதில்லை. ஆனால், அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஹைபிரிட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. அப்படி அறிமுகமாகவிருக்கும் ஹைபிரிட் கார்கள் குறித்த அறிமுகங்கள் இங்கே. மாருதி சுஸூகி, டொயோட்டா, நிஸான், ரெனோ மற்றும் ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய புதிய ஹைபிரிட் கார்களை களமிறக்கவிருக்கின்றன. இந்தியாவில் அடுத்து அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார் மாடல்களில் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பங்களைக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸூகி நிறுவனம்.
இந்தியாவில் அறிமுகமாவிருக்கும் ஹைபிரிட் கார்கள்:
'ஹபிரிட் 140' பவர்ட்ரெயினைக் கொண்ட புதிய டஸ்டர் மாடலை இந்தியாவில வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ரெனோ. 2025ம் ஆண்டு இந்த மாடலை இந்தியாவிற்குக் கொண்டு வரவிருக்கிறது ரெனோ. உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய பார்சூனர் மாடல் காரினை ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தி அடுத்த ஆண்டு உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா. முழுமையான ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் நான்காம் தலைமுறை X-ட்ரெயல் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த நிஸான் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன், பிளக் இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்ட டெய்ரான் கார் மாடலை 2025ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன்.