2026 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் அறிமுகமாகிறது செல்ஃப் டிரைவிங் கார்கள்
யுனைடெட் கிங்டம் தானியக்க வாகனங்கள் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது 2026 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் செல்ஃப் டிரைவிங் கார்கள் அனுமதிக்கும் ஒரு முக்கிய சட்டமாகும். இந்தச் சட்டத்திற்கு மன்னர் சார்லஸ் அரச ஒப்புதலை வழங்கியுள்ளார். எனினும், தானியக்க வாகனங்கள், திறமையான மனித ஓட்டுநர்களுக்குச் சமமான பாதுகாப்புத் தரங்களைச் கொண்டிருக்க வேண்டும் என்று அவரது ஒப்புதலில் குறிப்பிடபட்டுள்ளது. வாகனம் தன்னிச்சையாக இயங்கும் போது, வாகனங்களின் பாதுகாப்பு பொறுப்பு ஓட்டுனர்களிடமிருந்து, காப்பீட்டு வழங்குநர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களுக்கு மாறுகிறது என்பதையும் இந்த சட்டம் கோடிட்டுக் காட்டுகிறது.
இங்கிலாந்தின் வாகனத் துறையில் ஒரு புரட்சி
மனித தலையீடு இல்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தானியக்க வாகனங்கள், பாதுகாப்பாக செல்வதற்கு கேமராக்கள், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) ஆகியவற்றை நம்பியுள்ளன. இந்நிலையில், இந்த புதிய சட்டம் இங்கிலாந்து வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான படியாக பார்க்கப்படுகிறது. இப்படி சுயமாக ஓடும் கார்களின்பயன்பாட்டை அதிகரிப்பதால் போக்குவரத்து விபத்துக்கள் குறைவதோடு, ஓட்ட முடியாதவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பிரிட்டிஷ் போக்குவரத்து செயலர் மார்க் ஹார்பர், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை இங்கிலாந்து வாகன தொழில்நுட்பத்தின் ஒரு "மைல்கல் தருணம்" என்று விவரித்தார். இந்த புதிய சட்டம் சாலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டையும் அதிகரிக்கும் என்று கூறிய அவர், பிரிட்டன் வாகனப் புரட்சியின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார்.