டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 vs பஜாஜ் டாமினார் 400, எது சிறந்த தேர்வு?
சமீபத்தில் தங்களுடைய அப்பாச்சி RR 310 பைக்கின் நேக்கட் வெர்ஷனான 'அப்பாச்சி RTR 310' பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது டிவிஎஸ். இந்த பைக்கிற்கு போட்டியாக ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கக்கூடிய பைக் என்றால் அது பஜாஜின் டாமினார் 400 தான். இந்தியாவில் 400சிசிக்கு உட்பட்ட பைக் பிரிவில் போட்டியிடும் இந்த இரண்டு இந்திய தயாரிப்புகள் எது சிறந்த தேர்வாக இருக்கும்? 2016ம் அறிமுகப்படுத்தப்பட்ட டாமினாருக்கு நேரடிப் போட்டியாக எந்த பைக்கும் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், தற்போது RTR 310 வடிவில் புதிய போட்டி முளைத்திருக்கிறது. எது சிறந்த தேர்வு, பார்க்கலாம்.
டிவிஸ் அப்பாச்சி RTR 310 vs பஜாஜ் டாமினார் 400: வசதிகள்
RTR 310-ல், அடாப்டிவ் டூயல் எல்இடி முகப்புவிளக்குகள், டைனமிக் டூயல் எல்இடி பின்பக்க விளக்குகள், உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார், அப்ஸ்வெப்ட் எக்சாஸ்ட், கிளைமேட் கண்ட்கோல்டு ரைடர் சீட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் கனெக்டிவிட்டியுடன் கூடிய முழுமையான கலர் TFT டிஸ்பிளே ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். டாமினார் 400-ல், மஸ்குலரான ப்யூல் டேங்க், அகலமான ஹேண்டில்பார், ஸ்பிளிட் டைப் சீட், எப்போதும் எரியும் வகையிலான எல்இடி முகப்புவிளக்குகள், எல்இடி பின்பக்க விளக்குகள், டூயல் பேரல் எக்சாஸட் மற்றும் டேங்கில் பொருத்தப்பட்ட இரண்டாவது டிஸ்பிளேவுடன் கூடிய ரிவர்ஸ் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது பஜாஜ்.
டிவிஸ் அப்பாச்சி RTR 310 vs பஜாஜ் டாமினார் 400: இன்ஜின்
RTR 310-ல், 35hp பவர் மற்றும் 27.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 312.2 சிசி ரிவர்ஸ் இன்க்லைண்டு இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிப்டருடன் கூடிய 6 ஸ்பீடு கியர் பாக்ஸை RTR 310-ல் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். டாமினார் 400-ல், 39.4hp பவர் மற்றும் 35Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 373.3 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஸ்லிப்பர் கிளட்ச்சைக் கொண்ட 6 ஸ்பீடு கியர் பாக்ஸை டாமினார் 400-ல் கொடுத்திருக்கிறது பஜாஜ்.
டிவிஸ் அப்பாச்சி RTR 310 vs பஜாஜ் டாமினார் 400: பாதுகாப்பு மற்றும் விலை
இரண்டு பைக்குகளிலுமே இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குடன், பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், RTR 310-ல் கூடுதலாக, கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகள் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அப்பாச்சி RTR 310 பைக்கானது ரூ.2.43 லட்சம் முதல் ரூ.2.64 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாமினார் 400 மாடலோ ரூ.2.3 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இரண்டில் குறைந்த விலை நிறையான வசதிகளுடன் டாமினார் 400 தனித்துத் தெரிகிறது. எனினும், கூடுதல் வசதிகளைக் கொண்டிருப்பதால் தன்னுடைய விலைக்கு நியாயம் சேர்க்கிறது RTR 310.