ஜூன் 16-ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப்
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ப்ரீமியம் பைக் லைன்-அப்பானது வரும் ஜூன் 16-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. 2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப்பில் பல்வேறு புதிய வசதிகளையும், பெர்ஃபாமன்ஸ் மாற்றங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட்-கூல்டு 765சிசி இன்ஜினானது, R வேரியன்டில் 120hp பவரையும், RS வேரியன்டில் 130hp பவரையும் வெளிப்படுத்தும் திறனுடன் இருக்கிறது. முந்தைய மாடலைவிட R வேரியன்டானது 2hp கூடுதலாகவும், RS வேரியன்டானது 7hp கூடுதலான பவரையும் உற்பத்தி செய்கிறது. டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை, அதே 80Nm டார்க்கையே உற்பத்தி செய்கிறது இந்த இன்ஜின்.
ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள்: பிற வசதிகள் மற்றும் விலை
இரண்டு வேரியன்ட்களிலும் அப்/டவுன் க்விக்ஷிப்டருடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், IMU வசதியுடன் கூடிய கார்னரிங் ABS மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. RS-ல் 5-இன்ச் TFT டிஸ்பிளேவும், R-ல் அடிப்படையான LCD டிஸ்பிளேவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. R வேரியன்டில் தற்போது ரோடு, ரெய்ன், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என நான்கு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. RS வேரியன்டில் புதிதாக ட்ராக் மோடு ஒன்றும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றுடன் இதன் விலையும் சற்றே உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. R வேரியன்டானது ரூ.10 முதல் ரூ.10.30 லட்சம் விலைக்குள்ளும், RS வேரியன்டானது ரூ.11.60 முதல் ரூ.12 லட்சம் விலைக்குள்ளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.