Loading...
100% எத்தனால் மூலம் இயங்கும் இன்னோவா கார் நவம்பர் 26-ல் அறிமுகம்: நிதின் கட்கரி அறிவிப்பு
100% எத்தனால் மூலம் இயங்கும் இன்னோவா கார் நவம்பர் 26-ல் அறிமுகம்

100% எத்தனால் மூலம் இயங்கும் இன்னோவா கார் நவம்பர் 26-ல் அறிமுகம்: நிதின் கட்கரி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2026
04:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், டொயோட்டா நிறுவனம் தனது புதிய பிளெக்ஸ்-ஃப்யூல் இன்னோவா காரை வரும் நவம்பர் 26 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆற்றல் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். 100% தூய்மையான உயிரி-எத்தனால் (E100) மற்றும் பெட்ரோல் கலவைகளில் இயங்கும் வசதியைக் கொண்டுள்ள இந்த கார், இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து புரட்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பம்

ஸ்ட்ராங்-ஹைபிரிட் தொழில்நுட்பமும் பெட்ரோல் செலவுக் குறைப்பும்

இப்புதிய பிளெக்ஸ்-ஃப்யூல் இன்னோவா காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் டோயோட்டாவின் அதிநவீன ஸ்ட்ராங்-ஹைபிரிட் தொழல்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது முழுமையாக மின்சார ஆற்றலிலேயே இந்த காரை இயக்க முடியும்.

பெட்ரோல் விலையுடன் ஒப்பிடுகையில் எத்தனால் விலை மிகவும் குறைவு என்பதால், வாகன உரிமையாளர்களின் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும் என அமைச்சர் நிதின் கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நவீன வசதிகள்

புதிய முகப்பு வடிவமைப்பு மற்றும் நவீன கேபின் வசதிகள்

இன்னோவா ஹைக்கிராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரவுள்ள இந்த புதிய காரில் வெளிப்புற வடிவமைப்புகள் பல மாற்றங்களை சந்தித்துள்ளன.

குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க கிரில், புதிய எல்.இ.டி முகப்பு விளக்குகள் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் இதில் இடம்பெறவுள்ளன.

மேலும் காரின் உள்புறத்தில் தற்போதைய 10.1 இன்ச் திரைக்குப் பதிலாக 12.3 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

எத்தனால் கார் சந்தை

இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளரும் எத்தனால் கார் சந்தை

இந்தியாவில் ஏற்கனவே மாருதி சுஸூகி வேகன்ஆர் பிளெக்ஸ்-ஃப்யூல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் கார் பிரிவில் E100 தொழில் நுட்பத்துடன் வரும் இரண்டாவது காராக இன்னோவா அமையவுள்ளது.

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமையைக் குறைக்கும் வகையில் டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய முன்னணி நிறுவனங்களும் பிளெக்ஸ்-ஃப்யூல் கார்களை உருவாக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய முயற்சியால் நாட்டின் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

ADVERTISEMENT