இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, அதன் துணைப்பிரிவுகள் ஒன்றாக உருவானது தான் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு. எஸ்யூவிக்கு உண்டான அம்சங்களுடன், ஆனால் எஸ்யூவிக்களை விட சற்று சிறியதாக உருவாக்கப்பட்டன காம்பேக்ட் எஸ்யூவிக்கள். இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றன. முதலில் கியா நிறுவனமானது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சோனெட் மாடலை இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. பவர்ட்ரெயினில் எந்த மாற்றமுமின்றி, வெளிப்பக்க/ உள்பக்க டிசைன் மற்றும் வசதிகளில் மட்டும் புதிய மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட சோனெட் மாடலை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது கியா மோட்டார்ஸ் நிறுவனம்.
பிற காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகங்கள்:
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் குஷாக் மற்றும் டைகூன் மாடல்களின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கின்றன ஸ்கோடாவும், ஃபோக்ஸ்வாகனும். இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவிருக்கும் பன்ச் EV-க்குப் போட்டியாக, கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்டர் EV-யினை தென் கொரிய சாலைகளில் சோதனை செய்து வருகிறது ஹூண்டாய். இந்தியாவிலும் இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக மாருதி ப்ராங்க்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட அர்பன் க்ரூஸர் டெய்ஸர் என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை வெளியிடவிருக்கிறது டொயோட்டா. ப்ராங்ஸின் இன்ஜின் மற்றும் பிற வசதிகளும் அதில் அளிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.