ஒரே வருடத்தில் ஐந்தாவது முறை; 27,000 சைபர்ட்ரக்குகளை திரும்பப் பெறுகிறது டெஸ்லா
டெஸ்லா அதன் மின்சார சைபர்ட்ரக் மாடலின் 27,000 யூனிட்டுகளுக்கு மேல் திரும்பப்பெறுகிறது. ஒரு வருடத்திற்குள் சைபர்ட்ரக் மின்சார வாகனத்தை டெஸ்லா திரும்பப் பெறுவது இது ஐந்தாவது முறையாகும். அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) ரியர்-வியூ கேமராவின் இமேஜ் டிஸ்ப்ளே தாமதமாக இயங்குவதாக கண்டறிந்ததை அடுத்து, இந்த திரும்பப் பெறுதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சைபர்ட்ரக்கின் சிஸ்டத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரியர் வியூ கேமராவின் டிஸ்ப்ளே தாமதமாக செயல்படுவது, விபத்து அபாயகங்களை அதிகரிக்கும் என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் எச்சரித்துள்ளது. சில வாகனங்கள் ரீபூட் செய்வதற்கு முன் அவற்றின் ஷட்டவுன் செயல்முறையை முடிக்க முடியவில்லை. இது ரியர் வியூ கேமராவில் எட்டு வினாடிகள் வரை தாமதத்திற்கு வழிவகுத்தது.
டெஸ்லாவின் சைபர்ட்ரக்கின் முந்தைய சிக்கல்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெஸ்லா ஆக்சலரேட்டர் சிக்கல்கள் காரணமாக சைபர்ட்ரக் டெலிவரிகளில் தாமதத்தை அறிவித்தது. இது பின்னர் ஒட்டும் ஆக்சலரேட்டர் பெடல்களை குறிப்பிடத்தக்க வகையில் திரும்பப் பெற வழிவகுத்தது. கடந்த ஜூன் மாதத்தில், விண்ட்ஷீல்ட் வைப்பர் மோட்டார் மற்றும் டிரிம் தொடர்பான பாதுகாப்புக் காரணங்களால் மற்றொரு திரும்பப் பெறுதல் அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய ரியர்-வியூ கேமரா கோளாறுக்கு பதிலளிக்கும் விதமாக, டெஸ்லா ஒரு இலவச மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டது மற்றும் நவம்பர் 25ஆம் தேதிக்குள் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு கடிதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ட்ரக்குகளின் காட்சி திரைகள் இரண்டு வினாடிகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க விதிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.