ஜாகுவார் லேண்டு ரோவரின் EMA பிளாட்ஃபார்மை தங்களுடைய புதிய காரில் பயன்படுத்தும் டாடா
2025ம் ஆண்டிற்குள் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் காரான 'அவின்யா'வை (Avinya) இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். இந்த எலெக்ட்ரிக் காரை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். தற்போது இந்த கார் மாடல் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது. டாடாவின் வசம் இருக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் EMA பிளாட்ஃபார்மை புதிய அவின்யாவில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதற்காக ஜாகுவார் லேண்டு ரோவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறதாம். அந்த EMA பிளாட்ஃபார்மையும் இந்தியாவிலேயே தயாரித்து, அதனை அவின்யாவில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
ஜாகுவார் லேண்டு ரோவரின் EMA பிளாட்ஃபார்ம்:
டாடா மோட்டார்ஸ் தங்களுடைய அவின்யாவில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்திருக்கும் இந்த EMA பிளாட்ஃபார்மே அடுத்த தலைமுறை ரேஞ்சு ரோவர் வேலார், டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் எவோக் ஆகிய ப்ரீமியம் கார் மாடல்களிலும் பயன்படுத்தப்படவிருக்கிறது. அவின்யா மட்டுமல்லாது அடுத்தடுத்து திட்டமிடும் பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்களிலும் இந்த EMA பிளாட்ஃபார்மையே பயன்படுத்த பரிசீலனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். இந்த EMA பிளாட்ஃபார்மானது பல்வேறு நவீன எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மாகும். அடுத்த ஆண்டு தான் இந்த பிளாட்ஃபார்மைக் கொண்ட தங்களுடைய முதல் காரை பிரிட்டனில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஜாகுவார் லேண்டு ரோவர்.