
பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சஃபாரி மற்றும் ஹேரியர்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ்.
இந்த கார்களானது குளோபல் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்று அசத்தியிருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பான கார்களை உருவாக்குவதற்கு பெயர் போன நிறுவனம் டாடா.
இந்தப் புதிய பாதுகாப்பு ரேட்டிங்குகளுடன் இந்தியாவில் தற்போது டாடா நிறுவனம் விற்பனை செய்து வரும் ஏழு கார் மாடல்களில், ஐந்து கார் மாடல்கள் குளோபல் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்ற கார் மாடல்களாக இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ்
அதிக மதிப்பை பெற்று புதிய சாதனை:
மேலும் இந்த பாதுகாப்பு தரச்சோதனையில், இந்தியாவிலிருந்து சோதனை செய்யப்பட்ட கார்களிலேயே அதிக மதிப்பெண்களைப் பெற்ற கார்கள் என்ற பெயரையும் பெற்றிருக்கின்றன சஃபாரியும், ஹேரியரும்.
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன இந்த இரண்டு எஸ்யூவிக்களும். முன்னதாக ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வாகன வெர்ட்டஸ் ஆகிய கார்கள் பெற்ற 29.71 புள்ளிகளே அதிகபட்ச மதிப்பெண்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளைப் பெற்று அசத்தியிருக்கின்றன டாடாவின் சஃபாரியும், ஹேரியரும்.
இத்துடன் இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டிருக்கிறது குளோபல் NCAP அமைப்பு.
பாரத் NCAP
இனி குளோபல் NCAP ரேட்டிங்குகள் இந்திய கார்களுக்கு இல்லை:
குளோபல் NCAP-ன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிற்கான பாரத் NCAP பாதுகாப்பு தரச்சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
அந்த பாரத் NCAP தரச்சோதனையானது கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. எனவே, இனி இந்திய கார்களானது பாரத் NCAP தரச்சோனதையின் மூலமே சோதனை செய்யப்படவிருக்கின்றன.
மேற்கூறிய டாடாவின் கார்களான சஃபாரி மற்றும் ஹேரியரை பாரத் NCAP தரச்சோதனைக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது டாடா.
தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய எஸ்யூவிக்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் கட்டமைப்பையும் மேம்படுத்தியிருப்பதாக டாடா நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.