EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த HPCL உடன் இணைந்தது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் மின்சார வாகனப் பிரிவான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி Ltd. (TPEM), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) உடன் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டாண்மை, இந்தியா முழுவதும் பொது சார்ஜிங் நிலையங்களின் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. HPCLக்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் டாடா EVகளுக்கு ஏற்ற சார்ஜர்களை நிறுவ இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது. TPEM மற்றும் HPCL இடையேயான இந்த ஒத்துழைப்பு, பயனர்களின் சிரமத்தை குறைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. RFID கார்டுகள் போன்ற பயனர்களுக்கு ஏற்ற சார்ஜிங் தீர்வுகளையும் TPEM-HPCL கூட்டணி அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார கார் சந்தையில் TPEMயின் ஆதிக்கம்
வளர்ந்து வரும் EV வாடிக்கையாளர் தளத்தை ஆதரிப்பதற்காக இந்த கூட்டாண்மை முக்கியம் என்று TPEM இன் தலைமை மூலோபாய அதிகாரி பாலாஜே ராஜன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டாண்மை இந்தியாவின் சார்ஜிங் உள்கட்டமைப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். HPCL, நாடு முழுவதும் உள்ள அதன் 21,500 பெட்ரோல் நிலையங்களில் டிசம்பர் 2024க்குள் 5,000 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. படிப்படியாக விரிவடைந்து வரும் இந்தியாவின் எலக்ட்ரிக் கார் சந்தையில் டாடாவின் EV தற்போது 68% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. பஞ்ச் EV, டியாகோ EV, டைகோர் EV மற்றும் நெக்சான் EV ஆகிய 5 டாடா எலெக்ட்ரிக் கார்கள் தற்போது வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.