குருகிராமில் பிரத்தியேக எலெக்ட்ரிக் கார் ஷோரூமைத் தொடங்கிய டாடா மோட்டார்ஸ்
இந்திய ஆட்டோமொபைல் துறையில், எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குருகிராமில் புதிய எலெக்ட்ரிக் வாகன ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது. முழுவதுமாக தங்களுடைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்தியேக ஷோரூமாக இதனை வடிவமைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். 2024, ஜனவரி 7ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக இந்த ஷோரூமைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டாரஸ் நிறுவனம். குருகிராம் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் மேலும் 2,3 நகரங்களில் இது போல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்தியேக ஷோரூம்களைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
அதிக எலெக்ட்ரிக் வாகன மாடல்களைக் கொண்ட டாடா மோட்டார்ஸ்:
இந்த பிரத்தியேக எலெக்ட்ரிக் வாகன ஷோரூம்களில், தங்களது எலெக்ட்ரிக் வாகன விற்பனை மட்டுமின்றி, அதற்கான சர்வீஸ் மற்றும் உதிரிபாக விற்பனை ஆகியவற்றையும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், டாடா எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில் அதிவேக DC எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களையும் இந்த எலெக்ட்ரிக் வாகன ஷோரூமில் அமைத்திருக்கிறது டாடா. இந்தியாவில் தற்போது நெக்ஸான் EV, டியாகோ EV மற்றும் டிகோர் EV ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டாடா. இவற்றைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் கர்வ் EV, பன்ச் EV, ஹேரியர் EV, சஃபாரி EV மற்றும் சியரா EV உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டாக்ஸ் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.