ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கார்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் டாடா
கேரளாவில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இந்தப் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்திற்கு மட்டும் தங்கள் கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். ரூ.20,000 தொடங்கி, ரூ.80,000 வரையிலான சலுகைகளை தங்களது கார் மாடல்கள் முழுவதும் அளித்திருக்கிறது டாடா. மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நாட்டின் முன்னணி ஃபைனான்சியர்களுடனும் கைகோர்த்து கேரள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கவிருக்கிறது டாடா. இத்துடன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் தங்களுடைய அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலில், XM மற்றும் XM(S) ஆகிய இரண்டு புதிய வேரியன்ட்களை, பல புதிய வசதிகளுடன் டாடா அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சலுகை வழங்குகிறது டாடா?
குறைந்தபட்சமாக, தங்களது நெக்ஸான் பெட்ரோல் மாடலுக்கு ரூ.24,000-மும், பன்ச் மாடலுக்கு ரூ.25,000-மும், நெக்ஸான் டீசல் மாடலுக்கு ரூ.35,000-மும் சலுகை வழங்குகிறது டாடா. இதனைத் தொடர்ந்து அல்ட்ராஸ் மாடலின் விலையில் ரூ.40,000-மும், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மாடல்களின் விலையில் ரூ.50,000-மும் சலுகை வழங்குகிறது டாடா. எலெக்ட்ரிக் கார் மாடல்களான, நெக்ஸான் EV ப்ரைம் மற்றும் நெக்ஸான் EV மேக்ஸ் மாடல்களுக்கு, கூடுதல் வாரண்டி காலத்துடன், முறையே ரூ.56,000 மற்றும் ரூ.61,000 சலுகை வழங்குகிறது அந்நிறுவனம். தங்கள் லைன்-அப்பிலேயே அதிகபட்சமாக, ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகிய மாடல்களின் விலையில் ரூ.70,000 சலுகையும், டிகோர் எலெக்ட்ரிக் மாடலுக்கு ரூ.80,000 சலுகையும் வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.