2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV'
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய எரிபொருள் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான, எலெக்ட்ரிக் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 4 வீல் டிரைவ் வசதியுடன் உருவாக்கப்படவிருக்கும் இந்தப் புதிய ஹேரியர் எலெக்ட்ரிக் கார் மாடலை, தங்களுடைய புதிய OMEGA கட்டமைப்பின் மீது உருவாக்கவிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதனையே ஜென் 2 பிளாட்ஃபார்ம் எனவும் குறிப்பிடுகிறது அந்நிறுவனம். இந்தப் புதிய ஹேரியர் எலெக்ட்ரிக் காரின் மாதிரியை, இந்த 2023ம் ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது டாடா மோட்டார்ஸ். இந்தியாவில் ரூ.26 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஹேரியர் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹேரியர் EV: என்ன எதிர்பார்க்கலாம்?
புதிய டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கங்களிலும், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை டாடா பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், 60kWh பேட்டரி பேக்கையும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியில் அந்நிறுவனம் வழங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பேட்டரியுடன், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500கிமீ ரேஞ்சை கொடுக்கும் வகையில் புதிய கார் வடிவமைக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. புதிய ஹேரியர் EV-யில் இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமார மற்றும் இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.