இந்தியாவில் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தும் டாடா மற்றும் மாருதி
ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 2024 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தது. தற்போது அதனைத் தொடர்ந்து, இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸூகி ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் கார் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன. டாடா நிறுவனமும் வரும் ஜனவரி மாதம் முதலே கார்களின் விலைகளை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. எனினும், எவ்வளவு விலையேற்றம் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் தற்போது பகிர்ந்து கொள்ளவில்லை. வரும் வாரங்களில் அது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப்படும் என டாடா மோட்டார்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த விலையேற்றம்?
இந்தியாவின் கார் விற்பனை சந்தையில் 42% விற்பனைப் பங்குகளைக் கொண்டு, முன்னணி கார் விற்பனையாளராக வலம் வரும் மாருதி சுஸூகியும் விரைவில் விலையேற்ற அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட தங்களது அறிக்கையில், ஒட்டுமொத்த விலையுயர்வு மற்றும் அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விற்பனை ஆகிய காரணங்களால் தங்களது வாகனங்களில் விலையை உயர்த்தும் முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது மாருதி. ஆடி நிறுவனமும் கிட்டத்தட்டே உயர்ந்து வரும் விலையேற்றத்தின் காரணமாகவே தங்களுடைய கார்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி, டாடா மற்றும் ஆடியைத் தொடர்ந்து பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் வாகன விலைகளை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.