விரைவில் அறிமுகமாக உள்ளது சுஸுகியின் பறக்கும் கார்
ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான சுஸுகியும் விமானப் போக்குவரத்து நிபுணரான ஸ்கைடிரைவ் Inc நிறுவனமும் இணைந்து, பறக்கும் காரின் உற்பத்தியைத் தொடங்க உள்ளன. ஜப்பானில் இருக்கும் இவாடா நகரில் உள்ள சுஸுகி நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் இதன் உற்பத்தி நடைபெற உள்ளது. இந்த ஆலையால் ஒவ்வொரு ஆண்டும் 100 எலக்ட்ரிக் பறக்கும் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த கார்கள் செங்குத்தாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்(eVTOL) செய்யும் விதமாக தயாரிக்கப்பட இருக்கிறது. ஸ்கைடிரைவ் SD-05 மாடலைத் தயாரிப்பதற்காக ஜூன் 2023இல் சுஸுகி மற்றும் ஸ்கைடிரைவ் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விமான டாக்ஸி சேவைகளுக்காக உருவாக்கப்படும் பறக்கும் கார்கள்
அதனை தொடர்ந்து, பறக்கும் கார்களின் உற்பத்தி தொடங்க உள்ளது. ஒரு eVTOL என்பது ஆட்டோபைலட் போன்ற தானியக்க அம்சங்களைக் கொண்ட மின்சார ட்ரோன் ஆகும். ஸ்கைடிரைவ் e-VTOL, ஒரு சிறிய மூன்று இருக்கைகள் கொண்ட ட்ரோன் ஆகும். இது ஹெலிகாப்டரைப் போலவே செங்குத்தாக தரையிறங்கும் திறனுடன் செயல்படுகிறது. இந்த வணிக ட்ரோன்கள், முக்கியமாக எதிர்கால விமான டாக்ஸி சேவைகளுக்காக உருவாக்கப்பட்டு வருகின்றன. இது நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு வான்வழி போக்குவரத்தை வழங்குவதையும், அதிக நகர்ப்புற போக்குவரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.