புதிய பைக் பெயரை இந்தியாவில் டிரேட்மார்க் செய்த ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் தங்களுடைய 350சிசி லைன்அப்பில், கிளாஸிக் 350, புல்லட் 350, ஹன்டர் 350 மற்றும் மீட்டியார் 350 என மிகவும் திறன் வாய்ந்த, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய பல்வேறு பைக்குளை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. மேலும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 400சிசிக்கும் உட்பட்ட பைக் பிரிவில், அனைத்து பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கடும் போட்டியளித்து வருகிறது அந்நிறுவனம். 2024ம் ஆண்டு பல்வேறு புதிய பைக்குகளை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வந்தது. அந்தப் புதிய பைக்குகள் பட்டியலில் பாபர் ஸடைல் பைக் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்:
அந்தப் புதிய பாபர் ஸ்டைல் பைக்கின் பெயரை தற்போது இந்தியாவில் டிரேட்மார்க் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ராயல் என்ஃபீல்டின் மிகவும் பிரபலமான கிளாஸிக் 350 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பாபர் ஸ்டைல் மாடலுக்கு கோவான் கிளாஸிக் 350 (Goan Classic 350) என்ற பெயரை அந்நிறுவனம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பெயரையே தற்போது டிரேட்மார்க்கும் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்தப் புதிய பைக்கை கடந்த சில மாதமாக இந்திய சாலைகளிலும் சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். விரைவில் இந்தப் புதிய பைக்கின் வெளியீட்டை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நாம் எதிர்பார்க்கலாம்.