ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு?
இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் செகமண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமே கோலோச்சி வந்தது. ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் நிறுவனங்களின் வருகை, அந்நிறுவனத்திற்கு சற்றே போட்டியை அதிகரித்திருக்கிறது. ஹார்லி டேவிட்சன் புதிய X440 மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ராயல் என்ஃபீல்டின் தாய் நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 11% வரை சரிவைக் கண்டன. ஆனால், ஹார்லி மற்றும் ட்ரையம்ப்பின் இந்திய வருகையை எதிர்நோக்கியே காத்திருந்தது ராயல் என்ஃபீல்டு. நான்கு வருடங்களுக்கு முன்பே இந்தியாவிலும், பிற சந்தைகளிலும் தங்களது கால் தடத்தை வழுவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கியது அந்நிறுவனம். அதன் விளைவு தான் கடந்த சில ஆண்டுகளில் வெளியான ஹன்டர் மற்றும் மீட்டியார் மாடல் பைக்குகள்.
ராயல் என்ஃபீல்டின் லைன்அப்:
அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் J-பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய புல்லட், லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் கூடிய புதிய ஹிமாலயன் ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இதன் பிறகு, 350சிசி செக்மெண்டில் J-பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கிளாஸிக், ஹன்டர், மீட்டியார் மற்றும் புல்லட் ஆகிய பைக்குகளும், அதற்கு சற்று மேலே ஸ்கிராம் 411, ஸ்கிராம் 440 மற்றும் ஹிமாலயன் 450 ஆகிய பைக்குகளும் RE-யின் இந்திய போர்ஃபோலியோவில் இருக்கும். இதனைத் தொடர்ந்து, 650சிசி மற்றும் 750சிசி செக்மெண்டில் R-பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட பைக்குகள் மற்றும் L-பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக் என 2025-ல் மிகவும் வலுவான மிட்ரேஞ்சு பைக் லைன்அப்பைக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு.